விருதுநகர் மாவட்டதில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு, வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி, ஆண்டாள் கோயிலுக்கு பட்டு, வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் கொண்டு வந்தனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இருந்து வஸ்திரம், பூ மாலை, துளசிமாலை, பழவகைகள், பிரசாதம் (சம்பா தோசை) உள்ளிட்ட பொருட்களுக்கு நேற்று மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு பரிவட்டங்கள், மங்கலப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துார் கொண்டுவரப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னாருடன் தேருக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்து, தேரோட்டம் நடைபெற்றது. ஆடிப்பூர தேரோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.