டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (21.07.2023) இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே, சந்தித்தார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற குடியரசுத் தலைவர், “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற இந்தியாவின் கொள்கை, இந்த பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு, வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.
கடந்த ஓராண்டில் இலங்கையின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க இந்தியா வழங்கிய பன்முக ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். தேவையான நேரத்தில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இரு நாடுகளின் கூட்டுச் செயல்பாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவின் தலைமையின் கீழ் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவும் இலங்கையும் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
முன்னதாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே 20-07-2023 அன்று இந்தியா வந்தடைந்தார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, கப்பல் சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.