திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், நாளை தமிழகமெங்கும், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டுகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இடங்களில் இந்த அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது.
* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம்.
* தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000/- வழங்குவதாக வாக்குறுதி தந்த தி.மு.க அரசு இப்போது பெரும்பான்மை பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க மறுக்கிறது.
* ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திமுக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது.
* மணல், கல் குவாரிகள் செயல்பாட்டில் ஊழல் மலிந்து கனிமவளக் கொள்ளை தமிழகமெங்கும் நடந்து வருகிறது. தமிழகத்தின் இயற்கை வளம் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது.
* அங்கன்வாடி மையங்கள் போதுமான அடிப்படை வசதிகளின்றியும், குழந்தைகளுக்குத் தகுந்த பாதுகாப்புமின்றியும், செயல்பட்டு வருவதை வேடிக்கைப் பார்க்கிறது திமுக அரசு.
* ஊரெங்கும் கள்ளச்சாராயம், தெருவெல்லாம் கஞ்சா விற்பனை, அப்பாவி மக்களை அடிமையாக்கும் ஒரு நம்பர் லாட்டரி போன்ற சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திணறுகிறது திறனற்ற திமுக அரசு.
* கள் விற்பனைக்குக் குறுக்கே நிற்கும் திமுக அரசு, எரி சாராய டாஸ்மாக் கடைகளைத் தானே நடத்தி மக்களை வஞ்சிக்கிறது.
* தினந்தோறும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுத்து நிறுத்த முடியாத திமுக அரசு.
* டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை திமுக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
* அனைத்து உணவுப் பொருட்களின், தக்காளி முதல் வெங்காயம் வரை, பருப்பு முதல் அரிசி வரை – விலை உயர்வு இறக்கை கட்டிப் பறப்பதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கிறது திமுக அரசு.
* அனைவருக்கும் வீடு, வீடுதோறும் குடிநீர், கிராமந்தோறும் சாலைகள் என மத்திய அரசு எண்ணற்றத் திட்டங்களை வழங்குகிறது. அதில் திமுக அரசு ஊழல் செய்கிறது.
* மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து திமுக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது.
* இந்துக் கோவில்களை இடித்துத் தள்ளும் திமுக அரசு, தமிழகத்தில் பக்தர்களின் மனம் வேதனையடையுமாறு செயல்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. திமுகவின் மத விரோதப் போக்கைக் கண்டிக்க வேண்டும்.
* அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பபடாமல் இருக்கின்றன, இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், கல்வி வளர்ச்சி தடைபடுகிறது.
* ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள், மருந்துப் பொருட்கள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய வகையில், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளும் திமுக அரசை கண்டித்து நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.