டெல்லிகள் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ‛‛ ரோஜ்ஹர் மேளா ” நிகழ்வில், வருவாய்த்துறை, அஞ்சல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று நாடு முழுவதும் 44 இடங்களில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
நாடு வளர்ச்சி பாதையில் இருக்கும் போது, அரசு ஊழியராக பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயம். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானது. உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும். உலக நாடுகளின் கண்கள் இந்தியாவை நோக்கி உள்ளன.
வங்கித்துறை மிக வலுவாக உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கடந்த, காங்கிரஸ் ஆட்சியில், வங்கித்துறை பெரிய அழிவை சந்தித்தது. இன்று எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றச் சேவையை கொண்டு வந்துள்ளோம். ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு ‛போன் பேங்கிங்’ வசதி 140 கோடி குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. சில குடும்பங்களுக்கு நெருக்கமானவர்கள், வங்கிகளுக்கு போன் செய்து பல ஆயிரம் கோடி கடனை பெற்றுக் கொண்டனர். ஆனால் அவை திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த ‛போன் பேங்கிங் ‘ மோசடி முந்தைய ஆட்சியில் நடந்த மிகப்பெரிய மோசடி ஆகும்.இந்த மோசடி காரணமாக வங்கித்துறையின் முதுகெலும்பு உடைந்தது.
2014- ஆம் பிறகு, வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்தோம். அரசு வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தினோம். சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டால், ஏற்படும் இழப்புகளை குறைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பணியாற்றி வருகிறோம் எனக் கூறினார்.