அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் சேர நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175 அதில் 1,87,847பேர் விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், அவர்களில் 1,78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து சிறப்பு கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மூலமாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும்.
அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.