பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் வேலைவாய்ப்பு விழாக்களில் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சுமார் 450 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடைகள் வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் 198 பேருக்கான பணி நியமன ஆணைகளை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வழங்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ரயில்வே துறை, பாதுகாப்புத்துறை, அஞ்சல் துறை, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. அதேபோல் இந்தியன் வங்கியின் இமேஜ் அரங்கில் நடைபெற்ற மற்றொரு விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்,
இந்திய இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அஞ்சல் துறை, உயர் கல்வித்துறை போன்ற துறைகளிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவற்றிலும் வேலைக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமரின் முன் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முந்தைய காலத்தில் அரசுப் பணி என்பது அதிகாரம் மற்றும் அந்தஸ்துக்கு அடையாளமாக இருந்தது. தற்போது புதிய பணிக்கலாச்சாரத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உருவாக்கி இருப்பதாகவும் சேவை மனப்பான்மையுடன் இளைஞர்கள் வேலையில் சேர்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினர். 2014 ஆம் ஆண்டில் உலகின் பெரிய பொருளாதாரத்தில் பன்னிரண்டாவது நாடாக இருந்த இந்தியா, தற்போது வலுவான நிலையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக அவர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொவிட் காலத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று வளர்ந்த நாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அதை முறியடித்து இந்தியா வளர்ந்த நாடுகளுக்கே 20 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கும் நிலைக்குப் பிரதமர் நாட்டை வெற்றிகரமாக வழி நடத்திச் சென்றதாகவும் அவர் கூறினார். கொவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அதிக முதலீடுகள் இந்தியாவிற்கு வந்திருப்பதாகவும் அடிப்படைக் கட்டமைப்புகள் பெருமளவு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டில் நான்கில் மூன்று இந்தியர்கள் திறன் குறைந்தவர்களாக இருந்தார்கள் என்று கூறிய அமைச்சர், திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். மக்களுக்கு சேவை செய்தல், நல்ல நிர்வாகம், வறியோர் நலத் திட்டம் போன்றவற்றை தற்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார். இந்த விழாவில் 25 பேருக்கு நேரடியாகப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன என தெரிவித்தார்.