மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து நமோ செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நமோ செயலி 2015 ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி இந்த செயலியில் வெளிவருகிறது.
மத்திய அரசின் நலத் திட்டங்களால் லட்சக்கணக்கான தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர். பிரதமர் வீடு கட்டும் திட்டம், சாலை வியாபாரிகளுக்கு கடன் உதவி, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் உரத்திற்கான மானியம், இப்படி பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில், தமிழகத்தில் மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்களால் பயனடைந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அதனை நமோ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழக பாஜக மகளிர் அணியினர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் மாநிலங்களிடையே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களின் புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில், தமிழகம் இந்திய அளவில், மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக அளவில், ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு மேல் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த பாஜக சகோதர சகோதரிகள் 13 பேரில், 11 பேர், கோவை பெருங்கோட்ட மகளிரணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
இந்த நிகழ்வினை அகில இந்திய அளவில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும், மகளிர் அணியின் தேசியத் தலைவி வானதி சீனிவாசன் அக்கா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்திலிருந்து பெருவாரியான வெற்றியாளர்களைப் பெற்றுத்தந்த கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளர் ஏ.பி.முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.