கடந்த 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால் 11 வது நாளான இன்று மக்களவை கூடியதும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீதான விவாதம் நடைப்பெற்றது.
டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்து பேசுகையில், “புதிதாக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி பற்றி யோசிக்கும் முன்பு, எதிர்க்கட்சிகள் தலைநகர் டெல்லியை பற்றி கவலைப்பட வேண்டும். தலைநகர் டெல்லியில் எந்தவொரு பிரச்னையிலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, தலைநகருக்கான சட்டங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்களுக்கு எதற்கெடுத்தாலும் போராடுவது மட்டுமே நோக்கம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல. இங்கு நடக்கும் ஊழல்களை மறைக்க லஞ்ச ஒழிப்புத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதே நோக்கம்.
2015-ம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வரும் வரை டெல்லி பல்வேறு அரசுகளின் கீழ் இருந்துள்ளது. அப்போதெல்லாம் டெல்லி நிர்வாகம் சுமுகமாகவே செயல்பட்டது. ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், இராஜாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களும் கூட டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரும் யோசனைக்கு எதிராகவே இருந்தனர், என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும், டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் என்னதான் கூட்டணி அமைத்தாலும், பிரதமர் மோடி வரும் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றார் அமித்ஷா.
இந்த நிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா கடும் அமளிகளுக்கு இடையில் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாரதிய ராஷ்ட்டிரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆம் ஆத்மி எம்பி சுசில்குமார் ரின்கு ஆவணங்களைக் கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம்.பிர்லா தெரிவித்தார். டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா நிறைவேறிய நிலையில் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.