2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் முதல் கூட்டம் கடந்த 31-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் மேற்கு உத்தரப் பிரதேசம், புந்தேல்கண்ட் மற்றும் பிரிஜ் பிராந்தியத்தைச் சேர்ந்த 42 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தும், ஆலோசனை கூறியும் வருகிறார். இக்கூட்டம் எதிர்வரும் 10-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
அந்த வகையில், நேற்று தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் – நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 48 எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழக்கம்போல எம்.பி.க்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அதேசமயம், என்ன பேசப்பட்டது என்பது குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.