தமிழ் மாதங்களில் ஆடி மாதம் கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம். தட்சிணாயணம் தொடங்கும் முதல் மாதமான ஆடியில் தான் நிறைய சிறப்பு நாட்கள் வருகின்றன . அம்மன் மாதம் என்று போற்றப்படுகிற ஆடி மாதத்தில் வருகிற பதினெட்டாம் நாள் மிக புண்ணியமான காலமாக அமைகிறது.
“ஆடி பட்டம் தேடி விதை” என்பது முன்னோர்களின் வாக்கு.
உத்திராயண காலத்தின் சூரியக்கதிர்களை விட, தட்சிணாயண காலத்தின் சூரியக்கதிர்கள் வேளாண்மைக்கு உகந்தது என்பதைத் தொன்று தொட்டே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
வேளாண் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீர்நிலை பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள படித்துறைகள் எல்லாமும் 18 படிகள் கொண்டதாகத் தான் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொய்து அது வெள்ளப்பெருக்காக ஏற்பட்டு காவிரி ஆற்றில் இருபபக்க கரைகளில் அந்தப் படிகள் மூழ்கும் அளவுக்கு நீர் பெருகி ஓடும். அந்த நீர்ப் பெருக்கை வரவேற்று, விழாவாக கொண்டாடுவது தமிழர் பண்பாடு. அந்த கொண்டாட்டம் தான் ஆடி பெருக்கான ஆடி 18 ஆகும்.
கர்நாடக மாநிலம் தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஒன்று கூடி, அந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.
ஆடிப்பெருக்கு விழா இன்று அல்ல நேற்று அல்ல சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
உழவர் ஓதை மதுகு ஓதை;
உடைநீர் ஓதை; தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப
நடந்தாய்; வாழி, காவேரி!”
என்ற சிலப்பதிகாரம் வரிகள் மூலம் அறிய முடியும்.
அதாவது அறிவியலின் படி சூரியனின் இயக்கம், காற்றின் போக்கு, நிலத்தின் பக்குவம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விதைப்பு செய்யும் காலமாக ஆடி மாதம் அமைகிறது. அதனை மக்கள் வழிபட்டு தொடங்குவது தான் ஆடி பெருக்கு.
அந்த ஆடிப்பெருக்கு நன்`நாளில் ஆற்றங்கரையில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரை போல, மக்கள் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக்கெடுத்து வாழ்வில் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
மேலும் குருக்ஷேத்ர போர் முடிவுற்று பஞ்ச பாண்டவர்கள் போர் ஆயுதங்களைக் கழுவி துடைத்து, பூஜை போட்டனர். அந்த பூஜை போட்ட தினம் ஆடி பெருக்கு. மேலும் அந்த போரில் வீர மரணம் அடைந்த உறவினர்களுக்கு திதி கொடுத்தார்கள் என்று கூறி அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலை நாட்டப்பட்ட நாள் என்கின்றனர்.
நீர்நிலைகளுக்கு சென்று மா இலையில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள், திருமணமான பெண்களின் கணவன்மார்களை அழைத்து புதிய ஆடைகள், பரிசுகள் வழங்குவார்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள், விரைவில் திருமணம் கைகூட காவிரித்தாயை வணங்குவதும், குழந்தை இல்லாத பெண்கள் பலவகையான உணவுகளுடன் வளையல்கள் கொண்டு பூஜை செய்தால் கர்ப்பம் தரிப்பார்கள் என்பது நம்பிக்கை.
“நீர் இன்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு அதனை கருத்தில் கொண்டு அந்த நீரிணை வணங்கி வழிபடுவது தான் இந்த ஆடி பெருக்கு. எனவே, இந்த நன்னாளில் தங்கள் வாழ்வில் இன்புற்று வாழ இயற்கையையும் இறைவனையும் வழிப்பட்டு அருள் பெற்று வாழ வேண்டுகிறோம்.