ஆடிப் பெருக்கு என்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான நீரின் உயிர்நிலை பண்புகளைப் போற்றுகிறது. இந்நாளில் இயற்கையை, அன்னையாக தெய்வ வடிவில் வழிபடப்படுகிறார்கள். இது மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய பெருங்கருணைக்கு நன்றி சொல்லும் விழாவாகும்.
ஆடி மாதம் , தமிழகத்தில் பருவமழையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பருவமழை காரணமாக, இந்த காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் உயரும். எனவே ஆடி மாதம் விதைப்பு மற்றும் நடவு செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காவிரி நதிக்கு நன்றித் தெரிவிக்கும் வகையிலும் ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தின் 18 ம் நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தமிழகத்தின் அனைத்து வற்றாத நதிகளையும் வழிபடப்படுகின்றனர். தமிழகத்திற்கே உரிய ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழில் ‘பதினெட்டு’ என்றால் ‘பெருக்கு’ மற்றும் ‘எழுச்சி’ என்று பொருள். அதனால் ஆடிப் பெருக்கு ‘பதினெட்டுப் பெருக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர் வைபவம் பெரும்பாலும் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடிப் பெருக்கு சடங்குகள்:
ஆடிப்பெருக்கு நன்னாளில் பெண்கள் பார்வதி தேவியை வழிபடுகின்றனர். பல்வேறு வகையான அரிசி உணவுகள் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு நைவேதியமாக தேங்காய் சாதம், இனிப்புப் பொங்கல், தயிர் சாதம், பஹலா சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் போன்றவை வைக்கப்ப்படுகிறது. அம்மனை வணங்கிய பின் அக்ஷதை,மலர்கள் தூவி புண்ணிய நதிகளில் சிறந்த காவிரித் தாயை வழிபடுகின்றனர்.
இந்த புனித நாளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டாக சேர்ந்து தண்ணீர் இடைவிடாத பெருக்கெடுத்து ஓட பிரார்த்தனை செய்கிறார்கள். இறுதியில் நல்ல அறுவடைக்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி, புது ஆடைகள் அணிந்து, காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள குளித்தலையில் மரபு சார்ந்த சடங்குகளைச் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது.
பின்னர், வெல்லம் மற்றும் அரிசி மாவைப் பயன்படுத்திச் சிறப்பு விளக்கு தயாரிக்கப்படுகிறது. மா இலைகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதில் மஞ்சள் நூல், மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த தீபம் ஆற்றில் மிதக்க விடுகின்றனர்.
ஆடிப் பெருக்கின் போது ‘கலந்த சாதம்’ எனப்படும் சிறப்பு சாதம் தயாரிக்கப்படுகிறது. அதனைப் பூஜை முடிந்ததும், பக்தர்கள் குடும்பத்துடன் ஆற்றங்கரையில் விருந்து உண்பார்கள். அன்றைய முழு நாளும் காவிரி ஆற்றங்கரை ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிடும்.
இளம் பெண்களும் திருமணமான பெண்களுடன் இணைந்து இந்த மங்கள பூஜையை அனுசரிப்பார்கள். அப்போது காப்பரிசி (வெல்லம் மற்றும் கைக்குத்தல் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு), கருகமணி (கருப்பு நிற மணிகள்), காதோலை (பனை ஓலைகளால் செதுக்கப்பட்ட காதணிகள்) ஆகியவற்றை பிரசாதமாக வழங்கும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர்களைப் பெறுவார்கள் என்பது பிரபலமான நம்பிக்கை. ஆடிப் பெருக்கு விழாவில் இளம்பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு இசைவாக ஆடுகிறார்கள்.