உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி இந்து கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்து தரப்பினர் ஆதாரங்களுடன் கூறி வருகின்றனர். மேலும், மசூதி வளாகத்திற்குள் உள்ள சிருங்கார கௌரி அம்மனை நாள்தோறும் தரிசனம் செய்யவும், பூஜை செய்யவும் அனுமதி வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த 4 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் ஆய்வு நடத்துவதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 26-ம் தேதி மாலை 5 மணி வரை தொல்லியல் ஆய்வு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மசூதி கமிட்டிக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ஜூலை 26, 27-ம் தேதிகளில் விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.