ஊழலுக்கு எதிரான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையைப் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், 11 வது சட்டமன்றத் தொகுதியில் இன்று மேற்கொண்டார். ஆலங்குடி பகுதி மக்கள் அண்ணாமலைக்கு வெகு சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசு ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் முடித்துள்ளன. 5 ஆண்டுக்கால ஆட்சியில் பாதியை முடித்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையான ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவு செய்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியை, மக்கள் தராசு தட்டில் வைத்துப் பார்க்கிறார்கள்.
திமுகவின் அராஜகத்தால், 2022 ஆம் ஆண்டு தாய் தற்கொலை, 2023 ஆம் ஆண்டு தந்தை தற்கொலை, தற்போது நம் முன் இரு குழந்தைகளும் பெற்றோரை இழந்து நிற்கின்றனர். திமுகவின் ஆட்சி என்பது கட்டப்பஞ்சாயத்து மற்றும் குற்றம் செய்பவர்களுக்கு உடந்தையாகவும் இருக்கிறது, குற்றம் செய்பவர்களே ஆட்சி கட்டிலில் இருப்பதுதான் திமுகவின் திராவிட மாடல். குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட கோகிலா எழுதி உள்ள கடிதத்தில், திமுகவின் அராஜகத்தால் தான் இப்போது மன உளைச்சலில் சாகிறேன் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவர்களது தற்கொலை குறித்தும், பெற்றோரை இழந்து இருக்கும் இந்த குழந்தைகள் குறித்தும், தமிழக அரசோ, திமுக கட்சிக்காரர்களோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் இவர்களது தற்கொலைக்கு எந்தத் தீர்வும் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்த தற்கொலைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவமெய்யநாதனும் ஒரு முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.
இந்த திமுக ஆட்சியைப் பொறுத்தவரை கமிஷன், கரப்க்ஷன், கலெக்ஷன், என்று மூன்று c தான் இந்த ஆட்சியின் முகவரி அடையாளம். ஆனால் இந்த ஆலங்குடியில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களால் பல்வேறு மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
ஆலங்குடியை பொறுத்தவரை மா, பலா, வாழை என முக்கனிகள் விளையக்கூடிய ஊர். ஆசியாவிலேயே மிகப்பெரியதான 33 அடி குதிரை சிலை, ஆலங்குடியில் உள்ள அய்யனார் கோயிலில் தான் இருக்கிறது.
ஆலங்குடியில் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது, இதற்காக காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதற்காக நிதியை ஒதுக்காமலேயே திமுக அரசு, ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தால்,ஆலங்குடியைச் செல்வ செழிப்பாக மாற்ற நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
மத்தியில் இருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஊழல் இல்லாத, நேர்மையான, ஏழைகளுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் 10 லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கீரமங்கலம் அரசு பள்ளியில் நீட் தேர்வில் 3 பேர் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். மேலும் இங்கிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்திற்கு 21-வது இடம் உள்ளது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 10 மதிப்பெண்கள் வழங்கியிருக்கும் நிலையில் தமிழகத்திற்கு 4.4 மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியாவில் சுத்தமான ஆற்று நீரை எடுத்துக் குடிக்க முடியும் என்ற ஆய்வில், தமிழகம் கடைசியிலிருந்து மூன்றாவது மாநிலமாக இருக்கிறது, தற்போது ஆற்று நீர் மாசு நிறைந்துள்ளது. இந்தியாவில் மோசமான கடல் அரிப்பு இருக்கும் மாநிலமாக தமிழகம் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. கால்நடை மாற்றத்தில் தமிழகம் ஐம்பதாவது இடத்தில் உள்ளது. இவ்வாறாக அமைச்சர் மெய்யநாதனின் சாதனைகளாக உள்ளது என சுட்டிக்காட்டினார். எங்க இருக்கும் அமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என சொல்கிறார், நீட் தேர்வு பற்றி பேச வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பாஸ் மார்க் ஏதாவது வாங்கி இருக்கணும், சொந்தத் துறையை நிர்வாகிக்க தெரியாத இந்த அமைச்சர் நீட் தவறு என பேசுகிறார் என குற்றச்சாட்டினர்.
அமைச்சர் ரகுபதியிடம், லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைச்சாலை துறை வழங்கப்பட்டுள்ளது, இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு
உள்ளது. மேலும் இவர் புதுக்கோட்டை நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர். ஊழலுக்காக தண்டனை பெற்ற இவரை எப்படி லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சராக்கலாம் ? எனக் கேள்வி எழுப்பினார்.
சிறைச்சாலையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைச்சாலைத் துறை அமைச்சராக உள்ளார். எல்லாம் காலம் கொடுமை! இப்படி இருந்தால் புதுக்கோட்டை எப்படி முன்னேறும் ! சரித்திரம் வாய்ந்த மண், திருவாசகம் இயற்றப்பட்ட மண், எல்லாச் சரித்திரத்துக்கும் சொந்தம் கொண்டாடும் புதுக்கோட்டை மண். தற்போது புதுக்கோட்டை தத்தளித்து கொண்டிருக்கிறது என்றால் ரகுபதி போன்ற அரசியல்வாதிகளால் தான். ஒருபுறம் ரகுபதி மறுபுறம் மெய்ய நாதன்- புதுக்கோட்டை எப்படி முன்னேறும்?
பாஜக சார்பில் புதுக்கோட்டைக்கு என்று தனியாக நாடாளுமன்ற உறுப்பினர் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழமையான முதன்மையான மாவட்டம் என்றால் புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
2014க்கு பிறகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தற்போது இலங்கை வடகிழக்கில் முழுமையான அமைதி திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் உறுதியான செயல்பாடு தான். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள கிளிநொச்சு, யாழ்ப்பாணம், பகுதிகளில், தமிழர்களுக்கு 60 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு சரஸ்வதி அரங்கம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஈழப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றால், ஒரே ஒரு மனிதரால் மட்டுமே முடியும், அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்தார். மற்றவர்கள் எல்லாம் நரம்பு புடைக்க பேசுவார்கள், அவர்களிடம் ஆட்சியும் இல்லை, அதிகாரமும் இல்லை அவர்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். 2024 இல் 3 வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டும்தான் ஈழப் பிரச்சனைக்கு முழு தீர்வு கொடுக்க முடியும், வேறு யாரும் தீர்வு கொடுக்க முடியாது.
இன்றைக்குக் குள்ளநரி கூட்டங்கள் (எதிர்க்கட்சியினர்) எல்லாம் ஒன்றுசேர்ந்து ஊளையிட்டு வருகின்றனர். ஆலங்குடியில் உங்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும் போது பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறை அல்ல நான்காவது முறையாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று சொல்லக்கூடிய உற்சாகமாக உள்ளது.
நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார், ஏழைப் பங்காளனாகவும், ஒரு சாமானியனாக பிரதமரின் ஆட்சி நடக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீது கடுகு அளவு கூட குற்றச்சாட்டுகள் இல்லை. அப்படிப்பட்ட ஆட்சியை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சி கட்டிலில் அமரும்போது நானூறு நாடாளுமன்ற உறுப்பினர் உடன் ஆட்சிக்கட்டில் அமர உள்ளார். அதில் 40 உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து அனுப்பி வைக்க வேண்டிய கடமை நமது கடமை. இந்த மாவட்டத்தில் அரசியல் அதிகம் பேசுவீர்கள். தமிழகத்தில் அரசியல் சரித்திரத்தை எழுதிய பெருமை அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய இந்தப் பகுதிக்கு இருக்கிறது. ஆழமான அரசியல் வேர் புதுக்கோட்டைக்கு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகுதான் முதன்முதலாக விவசாயி என்ற மனிதருக்கு, மரியாதை கொடுக்கப்பட்டது. அதுவரையில் விவசாயி என்ற மனிதருக்கு மரியாதை கொடுக்கப்படாமல் இருந்தது. பிரதமர் மோடி விவசாயிகளுக்காக நல திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் பிரதமர் மோடி தருகிறார். மேலும், விவசாயத்தில் பயிர் காப்பீட்டை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் பொருத்தவரை 2 லட்சத்து 15 ஆயிரம் உரக்கடைகள் இருக்கிறது. ஒரு உரமூட்டை விலையில் மத்திய அரசு என்பது சதவீதம் மானியமாக வழங்குகிறது. 20 சதவீதம் தான் விவசாயிகள் கையில் இருந்து செலுத்துவதாக உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் உரக்கடைகளில் மண்ணின் தன்மை குறித்து, சோதனை செய்து கொள்ளலாம். விவசாயம் நன்றாக செழித்திருக்க வேண்டும் என்று விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, உரக்கடையின் தன்மையையும் உயர்த்துகிறார்.
2014 முன்பு விவசாய தற்கொலைகள் இந்தியாவில் அதிகம். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தியை யாரும் பார்த்திருக்க முடியாது. இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகுதான் விவசாயிகள் உண்மையாக விவசாயம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
விவசாயம் செய்ய இந்த மாவட்டத்திற்குத் தண்ணீர் தேவை. காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஒரு முயற்சி, கால்வாய்களைச் சுத்தப்படுத்துவதற்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது, அதிலும் திமுக ஊழல் செய்கிறார்கள், லஞ்சம் கேட்கிறார்கள், சரியாக வேலை செய்யவில்லை, எனக் குற்றம் சாட்டினார். 2024 பாராளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது ஆட்சிக்கு வருவது உறுதி. நீங்கள் பிரதமரின் கையை பிடித்து, கூட இருக்க வேண்டும் என தெரிவித்தார்.