எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமானது, அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கி, இன்றும் தொடர்ந்து நடந்தது. காலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வாதங்கள் வைக்கப் பட்டன.இதையடுத்து, ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் விவாதத்தின் மீது பதிலளித்துப் பேசினார்கள்.
நிறைவாக, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்திய அரசு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மக்களால் மிகவும் நேசிக்கப்படும் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். இதனால்தான், அறுதிப் பெரும்பான்மையுடன் 2 முறையும் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தோற்கடித்து மோடி பிரதமராகி இருக்கிறார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் மோடி முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.
நரசிம்மராவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது, ஆதாயத்தைக் காட்டி காங்கிரஸ் தோற்கடித்தது. இதற்காக லஞ்சம் வாங்கிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் சிறை சென்றனர். அதே சமயம், வாஜ்பாய்க்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, பா.ஜ.க. அதை செய்யவில்லை. இதனால் ஒரே ஒரு ஓட்டில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தாலும், மீண்டும் ஆட்சி அமைத்தார் வாஜ்பாய்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாட்டு மக்களுக்காக மோடி 17 மணி நேரம் உழைக்கிறார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் மோடி உழைப்பதால் தான் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக மோடி வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்தார்.
2004 – 2014 ஆட்சியில் 70,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், மோடி ஆட்சியில் விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. காரணம், விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு 6,000 ரூபாய் மோடி அரசு வழங்கி வருவதோடு, விவசாயிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றி இருக்கிறோம்.
கொரோனா கால சவால்களை மத்திய அரசு திறம்பட கையாண்டு வெற்றிப் பெற்றது. கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ தானியங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மோடி அரசு வழங்கி இருக்கிறது. திட்டங்களுக்கு பெயர் வைப்பது மட்டும் தான் காங்கிரஸின் வேலையாக இருந்தது. அவற்றைச் செயல்படுத்தியது பா.ஜ.க. அரசுதான்.
மோடி ஆட்சியில் நிதி ஒதுக்கீட்டில் ஊழல், முறைகேடு இல்லை. இதனால், ஏழைகளுக்கு நிதி முழுமையாக சென்றடைகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 1 ரூபாய் ஒதுக்கினால், 15 பைசா மட்டுமே ஏழை மக்களைச் சென்று சேர்ந்தது. ஆனால், தற்போது ஜன்தன் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் சலுகைகள் நேரடியாக மக்களைச் சென்றடைகிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்க மட்டுமே முயற்சித்தது. ஒருவரை பிரதமராக்க பலமுறை முயற்சி செய்தும், அது இந்த நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் எங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி ஆட்சியில் தற்போது 5-வது இடத்துக்கு வந்திருக்கிறது. 2024 தேர்தலிலும் மோடிதான் பிரதமராக வருவார். அப்போது, இந்தியா பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறும்.
அதிகாரத்தைக் காக்க எதிர்க்கட்சிகள் முயலும் நிலையில், கொள்கையைக் காக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி போராடி வருகிறது.
மோடி ஆட்சியில் முக்கியமான 7 துறைகளில் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நமது வீரர்களின் தலைகளை கொய்தார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் அப்படி அல்ல. அதேபோல, ராணுவத்தில் அதிகப்படியன ஊழல் நடந்தது. தற்போது உள்நாட்டிலேயே ராணுவ தடவாளங்கள் தயாரிப்பதால் எந்த ஊழலும் இல்லை.
ஜி 20 மாநாடு இந்தியாவில் 55 இடங்களில் நடந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பலத்தை வெளிநாடுகள் உணர்ந்திருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சியில்தான் சீனா எல்லை வரை சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன” என்று உள்துறை அமித்ஷா பேசினார்.