சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ஹர் ஹர் திரங்கா” இயக்கத்தில் பங்கேற்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் தீவிரவாதியின் சகோதரர், தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவன் ஜாவித் மட்டூ. இவன் ஹிஸ்புல் முஜாகிதீன் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன். இத்தீவிரவாதி, ஃபைசல், சாகிப், முசைப் என பல்வேறு பெயர்களின் அழைக்கப்பட்டு வருகிறான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்பட்டு வரும் முக்கிய 10 குற்றவாளிகளில் இவனும் ஒருவன்.
இவனது சகோதரர் ரயீஸ் மட்டூ. இவர்தான், சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். தேசியக்கொடி ஏற்றியதோடு நில்லாமல், அதை வீடியோவாக எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெறும் ஹர் ஹர் திரங்கா (வீடுதோறும் தேசியக்கொடி) இயக்கத்தில் பங்கேற்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் ஏராளமானோர் நேற்று தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி ஹர் ஹர் திரங்கா இயக்கத்தில் பங்கேற்றதோடு, புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தீவிரவாதியின் சகோதரர் ஒருவர் ஹர் ஹர் திரங்கா இயக்கத்தில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.