சந்திரயான்-3 வெற்றிக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்துள்ளனர். விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்றுச் சாதனைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம் என்றும், சந்திரயான்-3 வெற்றியானது இந்தியா அறிவியல் மற்றும் பொறியியலில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கான சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் ஆய்வு பணியைச் செய்யவுள்ளது.