சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.
வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக இந்திய அரசு நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் பெரும் முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் சந்திரயான் திட்டம் மிக நுட்பமாக வகுக்கப்பட்டது. இதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இந்திய வானியல் பொறியாளரான மயில்சாமி அண்ணாதுரைக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி கிராமம் ஆகும். சந்திரயான் 1 பெரும் முயற்சியால், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சாதனை மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது.
இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா நியமிக்கப்பட்டார். திட்டத்தின் இறுதி வரை வெற்றிகரமாகச் செயல்பட்ட சந்திரயான் 2, கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய இயக்குநர் வனிதா முத்தையாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கொடுத்த உற்சாகத்தின் பேரில், சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது பெரும் முயற்சியால், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரைஇறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் 3 பணிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு பொறுப்பேற்ற வீரமுத்துவேல், முன்னதாக, இஸ்ரோ தலைமையக்கத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.
மேலும், சந்திரயான் 2 திட்டத்தில், நாசாவுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் வசித்து வரும் வீரமுத்துவேல், சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 1,2 மற்றும் 3 திட்டம் வெற்றிக்கான சாதனைப் பணியில் மூன்று தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.