அறுபடை வீடுகளில் 3-வது படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கத்தேர் இழுத்தும் , ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த பழனியாண்டவரை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கோவையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று மாலை அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய, கோவையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு மேலே சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருக்கோவிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பழனியாண்டவரை மனம் உருக தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, போகர் ஜீவ சமாதியில் வழிபாடு நடத்திய ஆளுநர் ரவி, திருக்கோவிலில் உள்ள தங்கத்தேரை இழுத்தும் வழிபாடு செய்தார். தமிழக ஆளுநரின் வருகையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.