சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, அண்ணாசாலை, கிண்டி, போரூர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கி விடியற்காலை வரை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.