வக்ஃப் வாரியச் சட்டம் 1995-ஐ ரத்து செய்யக் கோரும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்ஃபு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃபுக்கள் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன. வக்ஃபு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாநில அரசுகளின் மூலமாக வக்ஃபு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்ஃபு சொத்துக்கள் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், 1954-ம் ஆண்டு வக்ஃபு சட்டம் நாடளுமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால், இதில் சில குறைப்பாடுகள் இருந்த காரணத்தால் 1959, 1964 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1995-ல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில், பரவலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது.
அதன்படி, 1995-ல் இயற்றப்பட்ட வக்ஃபு சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் வக்ஃபு வாரியங்களை அமைக்க வேண்டும் என்பது வக்ஃபு சட்ட நெறிமுறை வகுத்துள்ளது.
வக்ஃபு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்ஃபு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்ஃபு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும், இப்பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.
இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பீஹார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வக்ஃபு வாரியங்களை அரசுகள் அமைத்துள்ளன.
புதுச்சேரி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிலும், அம்மாநில அரசுகள் வக்ஃபு வாரியங்களை அமைத்துள்ளன. அதேசமயம், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் டாமன், டையூ யூனியன் பிரதேசத்திலும் வக்ஃபு வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.
மேலும், 1995 வக்ஃபு சட்டத்தில் 83-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்ஃபு நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஆகவே, வக்ஃபு நெறிமுறைகளை 14 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கை செய்துள்ளன. இதர 6 மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன.
மீதியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தில் ஷியா பிரிவு வக்ஃபு சொத்துக்கள் இருந்து அவர்களுக்கு தனியே வாரியம் இல்லாத பட்சத்தில் வக்ஃபு வாரியத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.
இந்த நிலையில்தான், வக்ஃப் சட்டம், 1995-ஐ ரத்து செய்யக் கோரி தனி நபர் மசோதா, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 53 உறுப்பினர்களும், எதிராக 32 பேரும் வாக்களித்தனர். அதிக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து வக்ஃப் ரத்து மசோதா 2022 அறிமுகப்படுத்தப்பட்டது.
பா.ஜ.க. உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், மசோதாவை முன்வைத்த பா.ஜ.க. எம்.பி., நாட்டின் நலனுக்காகவே இம்மசோதா என்று குறிப்பிட்டார்.