2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா சந்தித்திருப்பதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரை வருகிற 22-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தரவை மேற்கோள்காட்டி நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சகம் தகவல்களை வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பேசுகையில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் தொடர்பாக கடந்த 2018 – 19-ம் ஆண்டில் 8,027, 2019 – 20-ல் 1,227, 2020 – 21-ல் 30,662, 2021 – 22-ல் 63,927, 2022 – 23-ல் 96,917 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த எண்ணிக்கை 200,760.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்ட குடியேற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அமெரிக்க அதிகாரிகள் சந்தித்த சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் உள்ளன.
அதேசமயம், அமெரிக்க எல்லையை கடக்கும்போது உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய குடிமக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வது குடியேற்றச் சட்டம் 1983-ன் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.
வெளியுறவு அமைச்சகம் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடம்பெயர்வை மேற்கொள்வதற்கும், இலக்கு நாடுகளில் ஒழுக்கமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்வதற்கும், பிரவாசி பாரதிய பீமா யோஜ்னா (பி.பி.பி.ஒய்.) மற்றும் புறப்படுவதற்கு முந்தைய நோக்குநிலை மற்றும் பயிற்சி (பி.டி.ஓ.டி.) ஆகியவை அடங்கும்.
மேலும், வருங்கால புலம்பெயர்ந்தோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சுரக்ஷித் ஜெயன் பிரஷிக்ஷித் ஜெயன்’ (பாதுகாப்பாக செல்லுங்கள், பயிற்சி பெறுங்கள்) பிரச்சாரத்தை 2018-ல் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டது. இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இடம்பெயர்வு மற்றும் நகர்வு கூட்டாண்மை ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது.
டென்மார்க், ஜப்பான், போர்ச்சுகல், மொரிஷியஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனும் தொழிலாளர் இயக்கம் கூட்டாண்மை ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு, மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது.
அதோடு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனிதக் கடத்தல் பற்றிய புகார்கள் விசாரணை மற்றும் வழக்கு விசாரணைக்காக மாநில காவல்துறைக்கு அனுப்பப்படுகின்றன” என்றார்.