குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய புள்ளியியல் பணி (ஐ.எஸ்.எஸ்.) பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசுகையில், “நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் அவமதிப்புகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளாகி இருக்கிறேன்.
தற்போது குடியரசுத் துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள் தொடர்கின்றன. ஆனால், இதற்கு பயந்து நாட்டுக்கு சேவையாற்றும் எனது கடமையில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. அதேபோல உங்களுக்கும் பணியில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் சூழல் வரும்.
தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், அவமதிப்புகளும் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதற்காக மனம் தளர்ந்து நாட்டுக்கான உங்கள் கடமையில் இருந்து விலகிவிடக் கூடாது. நம்மை அவமதிப்பவர்களின் மனப்பாங்கை நாம் மாற்ற முடியாது.
எனினும், அவர்களை மாற்ற முடியவில்லை என்பதற்காக நாம் நமது கடமையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. இளம் அதிகாரிகளான நீங்கள் நாட்டுக்கான உங்கள் கடமையை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் புகைக் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கல்யாண் பானா்ஜி, மாநிலங்களவைத் தலைவா் ஜெக்தீப் தன்கரைப் போல நடித்துக் காட்டி கேலி கிண்டல் செய்தார்.
இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்தார். இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர், விவசாயியின் மகன் மற்றும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவர் என்பதால், தான் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.
மேலும், நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஜெக்தீப் தன்கரை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.