பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். வெள்ளி விழா மலரை வெளியிட்ட அவர், நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஆசிர்வாதத்துடனும் நிதியுதவியுடனும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல ஆயிரம் கிராமப்புற வறியநிலை இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து தேசப் பணி செய்து வருவதாக தெரிவித்தார்.
தேசிய இலக்கான அமிர்தகாலத்துடன் அது தனது அடுத்த 25 ஆண்டுகால பயணத்தை இணைத்து, நமது இளைஞர்கள் மற்றும் பெண் சக்தியின் பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதேபோல் திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் விளையாட்டு கலாசாரம், அடிமட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பின் மிகப்பெரிய விரிவாக்கம், கேலோஇந்தியா மற்றும் ஃபிட்இந்தியா போன்ற முன்முயற்சிகள் எவ்வாறு பங்களிப்பை வழங்குகின்றன என்பதை விரிவாக விளக்கினார்.
தனிநபர்களின் முழுமையான வளர்ச்சி, நமது தேசத்தை உலகின் விளையாட்டு வல்லரசாக மாற்றுகிறது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.