இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரவிதாஸ் சிலையை திறந்து வைத்தார். ரவிதாஸ் அருங்காட்சியகத்தின் அடிக்கலையும் அவர் நாட்டினார்.
விழாவில் பேசிய அவர், இன்று ரவிதாஸ் ஜியின் புதிய சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு முன்வைத்தவர் சாந்த் ரவிதாஸ் என்றும், சமூகப் பிளவைக் குறைக்க அவர் பணியாற்றினார் என்று பிரதமர் கூறினார்.
உயர் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு. இவை அனைத்திற்கும் எதிராக அவர் குரல் எழுப்பினார். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியாவில் ஏதேனும் ஒரு துறவியோ, ஞானியோ அல்லது சிறந்த ஆளுமையோ பிறந்தார் என்ற வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்
மத்திய பாஜக அரசாங்கம் சாந்த் ரவிதாஸ் ஜியின் யோசனைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், இது அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாங்கம் என்று தெரிவித்தார். இன்று, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா முயற்சி’ என்ற இந்த மந்திரம் 140 கோடி நாட்டு மக்களை இணைக்கும் மந்திரமாகவும் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டுமே சமத்துவம் கிடைக்கும் என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் சேவை செய்வதில் தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் இண்டி கூட்டடணி தலைவவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களை மனதில் வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு, ஏழைகள் கடைசியாக கருதப்பட்டனர். இன்று அவர்களுக்காக மிகப்பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.