ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது, கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப மாநில அரசு காலதாமதம் செய்து வருகிறது. ஊழல்வாதிகளை சிறையில் அடைப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தோம். ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டாமா? என்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை அவர் கடுமையாக சாடினார்.
கூடாரத்தில் இருந்த குழந்தை ராமர் பிரமாண்ட கோவிலுக்கு மாற்றப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அயோத்தி ராமர் கோவில் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். .காங்கிரஸ் ரூ.12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளிலும் பாஜக-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியுடன் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோடை காலத்தில் ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அவரை தேடுவதே காங்கிரஸ் தலைவர்களின் பணியாக உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.