கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது. தற்போது தமிழக மீனவர்கள் தவறுதலாக அப்பகுதிக்கு சென்றால் கைது செய்யப்படுகிறார்கள்.
அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த காங்கிரசால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் தலைவர்கள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பற்றி எரியும் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பீர்களா? ஜனநாயகத்தில் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவை அராஜகம், ஸ்திரமற்ற நிலைக்கு தள்ள காங்கிரஸ் விரும்புகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பேசுகிறார். நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.