கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்க்க திமுக தலைவர் கருணாநிதியே முழு காரணம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், கச்சத்தீவு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன்தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம் சென்னையில் நடைபெற்ற போது, தலைமைச் செயலாளர், மத்திய வெளியுறைவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன்தான் இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. மேலும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் அரசுகளின் தவறான முடிவால், கடந்த 2004 முதல் 2014 -ம் ஆண்டு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு எல்லாம் முழு காரணம், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததே. எனவே, மீனவர்களின் இந்த துயரநிலைக்கு, திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம் என உறுதிபடத் தெரிவித்தார்.