அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும், சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு அரசு கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். அது பற்றிய செய்தி தொகுப்பு.
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக சீனா இருக்கிறது. சர்வதேச மின்சார வாகன சந்தையில் சீனாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவில் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அரசு மானியங்கள் அதிக அளவில் கிடைப்பதால் பிற நாடுகள் மின்சார வாகன உற்பத்தியில் சீனாவை முந்த முடியவில்லை .
மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவில் மோதலையும் சீனா கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மே மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன மின் வாகனங்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 36.3 சதவீதம் வரை வரி விதித்தது.
கனடாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு இன்னும் வரவில்லை என்றாலும் ஓரிரண்டு சீன நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் சந்தைக்குள் நுழைய ஆரம்பித்திருக்கின்றன. தற்போது கனடா சந்தையில் சீனத் தயாரிப்பான டெஸ்லாவின் மின்சார வாகனம் மட்டுமே உள்ளது .
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம், கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மின்சார வாகன உற்பத்தித் துறையில் சீனாவின் வர்த்தக நடைமுறைகள் நியாயமற்ற முறையில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனனுடனான சந்திப்புக்குப் பிறகு, சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு அரசு கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த புதிய வரிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது
மின்சார வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்க கனடா முயற்சித்து வருகிறது. அதன் காரணமாகவே சீன மின்சார வாகனங்களுக்கு கனடா அதிக வரி விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் அறிக்கை, கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடு சீனா என்றும், இந்த வரி விதிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி சீனா மீது கனடா நடத்தும் வர்த்தகப் போர் என்று விமர்சனம் செய்துள்ளது. இந்த புதிய கட்டணங்களால் குறிப்பாக பாதிக்கப்படும் டெஸ்லா நிறுவனம் ஐரோப்பாவில் செய்தது போல், விதிவிலக்குகளுக்காக கனடா அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலன் கிடைக்காவிட்டால், டெஸ்லா தனது கனடிய இறக்குமதிகளை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள அதன் தொழிற்சாலைகளுக்கு மாற்றலாம்.
டெஸ்லாவின் ஆறாவது பெரிய சந்தை கனடா ஆகும். கனடா அரசின் முடிவு சீனாவின் ஷாங்காயில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் டெஸ்லாவுக்குத் தான் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரத்யேக விதிவிலக்குகளுக்காக கனடா அரசை டெஸ்லா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.