மின்சார வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம். இ – டிரைவ் என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பேம் என்ற திட்டத்துக்கு மாற்றாக பி.எம். இ – டிரைவ் என்ற பெயரில் மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
பி.எம். இ-டிரைவ் திட்டம், அடுத்த ஒன்பது ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும்,
இந்த திட்டத்துக்காக, அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.
மின்சாரத்தில் இயங்கும் 24 லட்சத்து 79 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சத்து 16 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள், 14 ஆயிரத்து 28 பேருந்துகளுக்கு மானியம் வழங்கப்படும் எனக்கூறிய அவர், நாடு முழுதும் 88 ஆயிரத்து 500 பேட்டரி சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், மின்சார ஆம்புலன்சுகள், மின்சார சரக்கு வாகனங்களுக்கு மானியமாக 3 ஆயிரத்து 679 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு மின்சார பேருந்துகளை வாங்க 4 ஆயிரத்து 391 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மின்சார ஆம்புலன்ஸ் சேவைக்கும், பேட்டரியில் இயங்கும் சரக்கு வாகனங்கள் தயாரிப்புக்கு மாறவும், தலா 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனக்கூறிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மின்சார காருக்கு இனி மானியம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.