வரும் நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையிலான நேருக்கு நேர் விவாதம் நடந்தது.
சர்ச்சைக்குரியதாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த இந்த நேரடி விவாதத்தில் என்னவெல்லாம் பேசப் பட்டது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமெரிக்கா எப்படிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் தான் அதிபர் தேர்தல். இது அமெரிக்காவைத் தாண்டி எப்போதும் சர்வதேச அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம் மிக முக்கியமானதாகும்.
கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆன பிறகு, அவரும், டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்த முதல் நேரடி விவாதம் நடைபெற்றது.
காரசாரமான இந்த 90 நிமிட விவாதத்தில், பொருளாதாரம், இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா உக்ரைன் போர், கருக்கலைப்பு, கோவிட்-19 மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் டொனால்ட் டிரம்ப்பும் – கமலா ஹாரிஸ்ஸும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
விவாதம் தொடங்கும் முன் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக டிரம்ப் போட்டியிட்ட பிறகு, அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே நடந்த முதல் கைகுலுக்கல் இதுவாகும்.
கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட் என்று கூறிய ட்ரம்ப் , அவரிடம் நாட்டின் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும், மோசமான குடியேற்றத்தால் நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டதாகவும், பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் அதனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பினரும் பேரிழப்புக்கு ஆளானார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
ட்ரம்ப் அதிபரான இருந்த காலத்தில் பணக்காரர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டதாகவும், மீண்டும் டிரம்ப் அதிபரானால், அமெரிக்க மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் ‘டிரம்ப் விற்பனை வரியை’ செலுத்த வேண்டிய மோசமான நிலைமை உருவாகும் என்று கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார். மேலும், ட்ரம்ப் தமது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திய பிரச்சனைகளைத் ஜோ பைடன் ஆட்சியில் தீர்த்து வைத்ததாக குறிப்பிட்டார்.
9-வது மாதத்திலும் கருக்கலைப்பு செய்ய ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளதை குறிப்பிட்ட ட்ரம்ப், கருக்கலைப்பு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாகாணங்களில் இருக்கவேண்டும் என்றும், ஜோ பைடன் ஆட்சியில், சில மாகாணங்களில் குழந்தை பிறந்த பிறகு கொன்றுவிட அனுமதிப்பதாகவும் பயங்கர குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் எந்தவொரு மாகாணத்திலும் பிறந்த குழந்தையை கொல்ல சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
ரஷ்யப் படையெடுப்பைச் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அதிகம் செலவு செய்வதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்கள் இருவரையும் தமக்கு நன்றாக தெரியும் என்பதால் போரை தம்மால் நிறுத்தமுடியும் என்றும் குறிப்பிட்டார் . மேலும், தாம் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் காசா போர் தொடங்கியே இருக்காது என்றும், கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் எப்படி தம்மை அந்நாடு பாதுகாக்கிறது என்பதுதான் முக்கியம் என்றும், உடனடியாக போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், குடியேற்றம் தொடர்பாக இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக குற்றஞ்சாட்டிக் கொண்டனர். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் குறித்து கூறிய டிரம்ப் , அவர்களால் தான் நாடு அழிவுப் பாதைக்குச் செல்கிறது என்றும், அதற்கான காரணம் ஜோ பைடனும்,கமலா ஹாரிஸும் தான் என்றும் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்தில் நடத்தப் பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்பை விட ஹாரிஸுக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த நேரடி விவாதம், அமெரிக்க வாக்காளர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை தேர்தல் முடிவுகளே காட்டும்.