11 வயதில் 18 உலக சாதனைகளை படைத்து சக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் சாதனையாளர் கிருஷ்வா. பள்ளிப் பருவத்திலேயே பதக்கங்களை வாரி குவிக்கும் கிருஷ்வாவின் சாதனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வயதிற்கு தகுந்த அனுபவமும், அனுபவத்திற்கு தகுந்த வயதும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பார்கள். ஆனால் அசாத்திய திறமை இருந்தால் இளம் வயதிலேயே சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் சாதனையாளர் கிருஷ்வா.
கால்பந்தின் மீது ஏறி 10 நிமிடங்கள் நின்றுகொண்டே சிலம்பம் சுற்றி, இந்தியா புக் ஆப் வோர்ல்ட் ரெக்கார்டு, கால்பந்து மீது பலகை வைத்து ஏறி நின்று, 21 நிமிடங்கள் 14 நொடிகள் சிலம்பம் சுற்றி இன்டர்நேஷனல் அச்சிவர்ஸ் book ஆஃப் ரெக்கார்டு, ரோலா போலாவில் 10 நிமிடங்கள் 58 நொடிகள் சிலம்பம் சுற்றி ingenious charm world record என பல சாதனைகளை கிருஷ்வா படைத்துள்ளார்.
உலக சாதனைகளை படைத்துவரும் கிருஷ்வாவை, நடிகர் விஜய் சேதுபதி, நான் உனது ரசிகன் என கூறி பாராட்டிய நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் தந்தையும், இல்லத்தரசியாக இருக்கும் தாயும், தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு மகனின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
11 வயதில் 18 உலக சாதனைகளை படைத்திருக்கும் கிருஷ்வா, தனது 18வயதிற்குள் 22 உலக சாதனைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரதுஇந்த சாதனை பயணம் சக மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.