சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “தூய்மையே சேவை” என்ற கருப்பொருளில் பணிகள் நடைபெற்ற நிலையில், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆளுநருடன் இணைந்து தூய்மை, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் போன்றவற்றையும் கையுறை அணிந்துகொண்டு சுத்தம் செய்தார். இந்த நிகழ்வில் ஆளுநருடன் இணைந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், மாதத்திற்கு ஒருமுறையாவது மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கினார். சுத்தமின்மை, நோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என வருத்தம் தெரிவித்தார்.