டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுகபோக வசதிக்காக, டெல்லியில் உள்ள தனது முதல்வர் இல்லத்தை சீரமைக்க மக்கள் வரிப் பணம் 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பின் தமக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கால், தம்மை சாமானியன் என்று அர்த்தத்தில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார்.
தனது முதல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஒரு முதல்வராக சிக்கனமான வாழ்க்கை வாழ்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் ஒரு சாமானியனின் எளிய வீடு, தனக்குப் போதுமானது என்றும் கூறியிருந்தார்.
அப்படி பேசிய கெஜ்ரிவால் முதல்வர் ஆனதும், டெல்லியில் ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில், சிவில் லைன்ஸில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை ஆடம்பரமாக புதுப்பிக்க, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சாமானிய மக்களின் வரி பணத்தை வீணடித்திருக்கிறார்.
முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மொத்த பரப்பளவு 21,000 சதுர அடியாகும். இரண்டு மாடிகள் கொண்ட இந்த வீட்டில் மேல் தளம் வசிப்பதற்கும், கீழ் தளம் அலுவலக வேலைகளைக் கவனிப்பதற்கும் ஏற்ற வகையில் ஆடம்பரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மேல் தளத்தில் நிறைய தங்கும் அறைகள் உள்ளன.
11.30 கோடி ரூபாய் செலவில் உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 6.02 கோடி ரூபாய்க்கு விலையுயர்ந்த கிரானைட் மற்றும் மார்பிள் சலவை கற்களால் பளிங்கு தரை கட்டப்பட்டுள்ளது.
மின் அலங்காரங்கள் மற்றும் மின்சாதனங்களுக்காக மட்டும் 2.58 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. அறைகளில் உள்ள அலமாரிகளுக்கு சுமார் 1.41 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. மேலும் சமையலறை சாதனங்களுக்கு 1.1 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சாய்தள சோபாக்கள், 19.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன
சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஆடம்பர திரைச் சீலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 64 லட்சம் ரூபாய் செலவில், 16 அதிநவீன தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.85 கோடி ரூபாய்க்கு தீயணைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்காக 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளன.
கெஜ்ரிவால் தனது குளியலறையில் முழு தானியங்கி ஸ்மார்ட் டாய்லெட்க்காக மட்டும் 12 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறார். கூடுதலாக, இந்த அதிநவீன இல்லத்தின் உள்கட்டமைப்பு அலங்கார ஆலோசனைக்கு மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.
தன்னை சாதாரண நபராகக் காட்டிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பல ஆடம்பர வசதிகள் செய்திருப்பதாகவும், மக்களின் வரிப்பணத்தை கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
தமது பதவியை ராஜினாமா செய்தததால் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை கெஜ்ரிவால் காலி செய்த நிலையில், அந்த இல்லத்தைப் புதுப்பிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதற்கான செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரொனா தொற்று நோயுடன் மக்கள் போராடிய நேரத்தில், கெஜ்ரிவால் தனது உயர்ரக வசதிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து முதல்வர் இல்லத்தைப் புதுப்பித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் மூன்று மாதங்களில் டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில், கெஜ்ரிவால் கட்டிய சொகுசு பங்களா விவகாரம் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது