ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்டு, ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்த பெருமைக்குரியவர்கள் மாவீரர்கள் மருது சகோதரர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக முதல் போர் குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.
தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துத் தியாகம் செய்து, தேச விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் பிறப்பித்த ஜம்புத்தீவு போர்ப் பிரகடனம், என்றும் அவர்கள் வீரத்தைப் பறைசாற்றும். காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி என ஆன்மீகத் திருப்பணிகளில் சிறந்து விளங்கியவர்கள்.
ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்டு, ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்த பெருமைக்குரியவர்கள். மாவீரர்கள் மருது சகோதரர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.