ராமநாதபுரத்தில் சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்களால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோயில் செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் அலட்சியமாக கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக கர்ப்பிணி மனைவியுடன் அய்யாசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் நிலை தடுமாறிய வாகனம் கீழே சரிந்தது.
இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள், சாலையில் அலட்சியமாக கற்கள் கொட்டப்பட்டிருப்பது குறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.
உயிரிழந்த அய்யாசாமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.