தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட இவற்றை பின்பற்றுங்கள்.
பட்டாசு விபத்துகளால் பெரும்பாலான சமயங்களில் முதலில் பாதிக்கப்படுவது கண்களாகத் தான் இருக்கும்… கண்களில் தீக்காயம், எரிச்சல் என சிறிய காயங்கள் தொடங்கி, அஜாக்கிரதையாக இருந்தால் பார்வையே பறிபோகும் அளவுக்கு பெரிய பாதிப்பும் ஏற்படும். எனவே பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Eye protection goggles என்று அழைக்கப்படும் கண்களை பாதுகாக்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம்.
ஆபத்தை குறைக்கும் நீளம்!
பட்டாசுகள் வெடிப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட நீளமான ஊதுவர்த்திகளை வைத்தே பட்டாசுகளை பற்ற வைக்க வேண்டும். இதன் மூலம் பட்டாசின் அருகே செல்லாமல் தொலைவில் இருந்தே வெடிக்க முடியும் என்பதால் ஆபத்துகளும் குறையும்.
பற்ற வைத்த பட்டாசுகளை தொடாதே
ஒருமுறை தீப்பற்ற வைத்த பட்டாசு, தவறுதலாக வெடிக்கத் தவறினால், அதன் அருகில் செல்லவோ, அதனை கையில் எடுத்து பரிசோதிக்கவோ கூடாது. அதன் மீது தண்ணீரை தெளிக்க வேண்டும் அல்லது மண்ணைப் போட்டு அணைக்க வேண்டும்.
கைக்கு எட்டும் தூரத்தில் முதலுதவி பெட்டி
தரமான பட்டாசுகளை வாங்குவதன் மூலம் சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பையும் பெற்றோர் உறுதிப்படுத்த முடியும். அதிகம் புகை வரும் பட்டாசுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் தருணத்தில், முதலுதவி பெட்டியையும் அருகில் வைத்துக் கொள்வது நல்லது.
பட்டாசுகளை வீசினால் ஆபத்து நிச்சயம்
பட்டாசுகளை தரையில் வைத்து மட்டுமே வெடிக்க வேண்டும்… சில விநாடி உற்சாகத்திற்காக பட்டாசுகளை கைகளில் தூக்கி வீசுவது, அடுத்தவர்கள் மேல் வீசி அச்சுறுத்த நினைப்பது நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.
கண்களை கசக்கக் கூடாது
பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால், எக்காரணம் கொண்டு கண்களை கசக்கக் கூடாது. குளிர்ந்த நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் கண்களை கழுவ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கண்களை சுத்தமான பஞ்சு வைத்து கண்களை மூடி, துணியால் சுற்றிய பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தீக்காயம் ஏற்பாட்டால் என்ன செய்யலாம்?
பட்டாசு வெடிக்கும் போது தவறுதலாக உடலின் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டாலும், தண்ணீரில் முதலில் கழுவ வேண்டும். பின்னர் சுயமாக எந்த மருத்துவமும் பார்க்காமல், மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவதே நல்லது.
வீட்டிலேயே பட்டாசு தயாரிப்பதும் ஆபத்தே!
பட்டாசுகளை தயாரிக்கும் டிப்ஸ் என்று இணையதளத்தில் இருக்கும் வீடியோக்களை பார்த்து சிலர் சுயமாக பட்டாசு தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட செயல்களில் சிறுவர், சிறுமியர் ஈடுபடுவதை தவிர்க்க பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.
பெரியவர்கள் கண்காணிப்பில் வெடித்திடுக!
அதிக ஆற்றல் கொண்ட வெடிகள், சீறிப் பாய்ந்து உயரத்தில் வெடிக்கும் புஸ்வாணம் போன்ற பட்டாசுகளால், அதிக ஆபத்துகளும் ஏற்படும். எனவே அவற்றை பெரியர்வர்கள் துணையுடன் தான் சிறுவர், சிறுமியர் வெடிக்க வேண்டும்.