கிரிக்கெட் வீரர்களை போல கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ஊதியம் வழங்க திட்டமிட்டு வருவதாக இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கலந்துகொண்ட இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆண்கள் சீனியர் கூடைப்பந்து போட்டி முதல்முதலில் சென்னையில் நடைபெறுவதாக தெரிவித்தார். கூடைப்பந்து விளையாட்டை உலக தரவரிசையில் முன்னேற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 10 பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திருநங்கைகளையும் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.