திண்டுக்கல் அருகே போலீசார் தாக்கியதில் பலியானவரின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மட்டப்பாறை கிராமத்தில் கோயில் திருவிழாவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்ற போது உயிரிழந்தார்.
இந்நிலையில் போலீசார் தாக்கியதிலேயே தனது கணவர் உயிரிழந்ததாக செந்தில்குமாரின் மனைவி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், செந்தில்குமார் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட 4 போலீசாரிடம் இருந்து மொத்தம் 8 லட்சம் ரூபாய் பணத்தை வசூலித்து கொடுப்பதுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.