மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் காளை குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளையொட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மார்ச் 1-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆயிரத்து 300 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்த நிலையில், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, காளையை அடக்க முயன்ற கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரரான மகேஷ் பாண்டியை எதிர்பாராத விதமாக காளை முட்டி தள்ளியது. இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், மகேஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.