கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க முடியுமா என அரசுக்குக் கேள்வி எழுப்பியது.
ஆனால் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, சாதிகளின் பெயர்களில் சங்கங்களைப் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதேபோல் சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள் இடம்பெறக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களில் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதேபோல் அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆகியவற்றையும் அரசுப் பள்ளி என்றே அழைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.