ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.
தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டதாக கூறிய அவர். பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, உலக தலைவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தற்காப்புக்காக நமது ராணுவம் போராடியதை எந்த நாடும் தடுக்கவில்லை என கூறினார். மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே ஆப்ரேஷன் சிந்தூர் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோல் பாகிஸ்தானிடம் இருப்பதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ராணுவ தளவாட உடன்படிக்கைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் முதல் கச்சத்தீவு வரை காங்கிரஸின் கொள்கைகளால் தேசம் வருந்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் தனது மறைமுக போரையும், பயங்கரவாத நடவடிக்கையையும் கைவிடும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் என்றும் தெரிவித்தார்