இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறை அதிபரானதும் ட்ரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக இந்தியா மீது 25 சதவீத வரியும், தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி கூடுதலாக மேலும் 25 சதவீதம் வரி விதித்தார்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி வடிவம் பெறாத நிலையில், 23-வது இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. விமான நிலையத்துக்கே சென்று அதிபர் புதினை ஆரத் தழுவி வரவேற்ற பிரதமர் மோடி அவரை தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்றார்.
இந்தப் புகைப்படம் புவிசார் அரசியலில் ஒரு புயலின் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதின் தனது Aurus sedan காரில் பிரதமர் மோடியை அழைத்துச் சென்ற புகைப்படங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுத்துறை துணைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில், ஒரே காரில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் பயணிக்கும் படம் முக்கிய இடம் பெற்றது. ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டொவ், இந்தப் புகைப் படத்தைக் காட்டி, ட்ரம்பின் வரிக் கொள்கையும், இந்தியா மீதான மோதல் போக்கும் தான் அந்நாட்டை ரஷ்யாவின் பக்கம் தள்ளியிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீனாவை விட இந்தியாவுக்கு அதிக வரி என்பது அமெரிக்காவுக்கே பாதகமாக அமைந்துள்ளது என்று கூறிய அவர், இப்படி நீண்டகாலமாக நெருங்கிய உறவில் இருக்கும் ஒரு நாட்டை எதிரிகளின் கைகளில் தள்ளிவிடுவதால் நோபல் பரிசை வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறை, பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையே நிலவி வந்த நல்லுறவைச் சேதப்படுத்திவிட்டன என்றும் குற்றம் சாட்டியுள்ளார். H-1B விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களிடம் உள்ள நிலையில் அந்தக் கட்டணத்தை உயர்த்தியதால் ட்ரம்ப் இந்தியாவுக்கு துரோகம் செய்துள்ளதாகக் கூறியதுடன், பாதுகாப்பு, எரிசக்தி, AI மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
21ம் நூற்றாண்டின் உலகளாவிய ஒழுங்கை வரையறுப்பதில் அமெரிக்கா-இந்தியா உறவு முக்கியமானது என்று வலியுறுத்திய Kamlager-Dove கம்லேகர் டொவ், தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியாவை இழந்த முதல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருப்பார் என்றும் எச்சரித்துள்ளார்.
















