சிவராத்திரி முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா….பர்வத மலை மீது ஏற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் உலக பிரசித்தி பெற்ற பர்வத மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் அருள்மிகு ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
பர்வத மலை ஏறும் பக்தர்கள் நலன் கருதியும் மலையேறும் வழிப்பாதை மற்றும் மலை உச்சியில் ஒரே நேரத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பது காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் மலையர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து நடைமுறைக்கு வந்தது.
குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் என்ற அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் மலையேறு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றத்தினாகள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்புகளை அறிவித்தது. குறிப்பாக நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள், உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மலையேற முயற்சிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை சிவராத்திரி முன்னிட்டு பர்வத மலை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமான பக்தர்கள் பர்வத மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அறிவிக்கவில்லை. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் அவர்கள் அனைவரும் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி உள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















