காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 3 மாநில முதலமைச்சர்கள் ஆதரவாக குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதில் தென்மாநில முதலமைச்சர்கள் மூவரிடம் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமை வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
2019-லேயே காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டாலும், தெலங்கானாவின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்ததாகவும், கோதாவரியின் உபரிநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுத்து, அதிலிருந்து 493 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு ஏராளமான பணிகள் இருப்பதால், இத்திட்டத்தை மட்டும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்த ஒரு தனி சிறப்புப் பணிக்குழுவை அமைக்க வேண்டும் எனவும். பிரதமர் தலைமையில் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி, ஒருமனதான கருத்தொற்றுமையைஉருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
86 ஆயிரத்து 962 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
















