சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இன்றி தவித்த பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், போதிய பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தமிழ் ஜனம் செய்திக்குழுவிடம் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அரூர் வழித்தடத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிறப்புப் பேருந்துகள் சிக்கியதே தாமதத்திற்குக் காரணம் என விளக்கமளித்தனர். போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பயணிகளுக்கு இந்த நிலையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















