வரலாற்றில் முதன் முறையாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர்துணைத் தலைவர் குழுவுக்கு 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளார். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எஸ். பாங்னோன் கொன்யாக் என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்ட குழுவில் மொத்தம் எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள். மாநிலங்களவை வரலாற்றில் துணைத் தலைவர் குழுவில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதவே முதல் முறையாகும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், மாநிலங்களவை இருக்கை முற்றிலும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. மாநிலங்களவைத் தலைவர் அவையின் அலுவல்கள், அவையில் வருகை, உறுப்பினர்கள் உரையாற்றும் விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தொடர்பான விஷயங்களுக்கு மின்னணு பலகைகளைப் பயன்படுத்துவார்கள்.
துணைத் தலைவர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் விவரங்கள்
பி.டி.உஷா: இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் புகழ்பெற்ற தடகள வீரர் ஆவார். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இவர் பாதுகாப்புக் குழு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு மற்றும் நெறிமுறைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
எஸ்.பாங்னோன் கொன்யாக்: இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ஏப்ரல், 2022 இல் நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆவார். இவர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு,பெண்கள் அதிகாரமளித்தல் குழு, அவைக் குழு மற்றும் ஷில்லாங்கின் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார்.
டாக்டர் ஃபௌசியா கான்: இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2020 ஏப்ரலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்கள் அதிகாரமளித்தல் குழு, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகக் குழு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
சுலதா தியோ: இவர் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில்துறை குழு, பெண்கள் அதிகாரமளித்தல் குழு, இலாப அலுவலகத்திற்கான கூட்டுக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மேற்குறிப்பிட்ட பெண் உறுப்பினர்களைத் தவிர, வி விஜயசாய் ரெட்டி, கன்ஷியாம் திவாரி, டாக்டர் எல் ஹனுமந்தய்யா மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகியோரும் துணைத் தலைவர்களின் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சுலதா தியோ, எஸ் பாங்னோன் கொன்யாக், திருமதி பி.டி.உஷா, டாக்டர் ஃபௌசியா கான் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.