இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமானநிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அவரை வரவேற்றார். பின்னர், இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே இன்று சந்தித்தார். மேலும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைக்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்தியாவின் யு.பி.ஐ பண பரித்தனையை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய ரணில் விக்ரம சிங்கே,
இலங்கையில் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில் இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி இருந்தது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தியாவுடன் தொழில், வர்த்தகம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய அவர்
இந்தியாவின் வளர்ச்சி, அயல் நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளுக்குச் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் அதானியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொழும்பில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்துவது, 500 மெகாவாட் காற்றாலைத் திட்டம், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார்.