டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு ‛‛ரோஜ்ஹர் மேளா” 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நாடு முழுவதும் 44 இடங்களில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசுப் பணிகளுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வழங்கினார்.
நிதித்துறை, அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 109 பேர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் உரையாற்றிய போது,
நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்றும் அதனை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து புதிய இந்தியா விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவாகி இருப்பதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 100-வது சுதந்திர தினத்தில் வளர்ந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
2014 க்கு முன்பு இந்தியாவில் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன என்றும் ஆனால் இப்போது நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த நாடாக மாற நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்றார். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். இதுவரை 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் வேலைவாய்ப்புத் திருவிழா 2022 அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு கர்மயோகி தளத்தில் ஆன்லைன் வாயிலாக திறன் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான நல்லாட்சி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் ஆகியவற்றின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் இம்மூன்றும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கிய தாரக மந்திரங்கள். அபிவிருத்தித் திட்டங்களை அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பெண் தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா, விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை, சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் (ஸ்வாநிதி) திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.