கடந்த 9 ஆண்டுகளில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏழை மக்களுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை எங்களது அரசு கட்டிக் கொடுத்திருக்கிறது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் புகேவாடி நிலையத்திலிருந்து சிவில் நீதிமன்ற நிலையம் வரையிலும், கார்வேர் கல்லூரி நிலையம் முதல் ரூபி ஹால் கிளினிக் நிலையம் வரையிலுமான 2 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த புதிய வழித்தடங்கள், புனே நகரின் முக்கிய இடங்களான சிவாஜி நகர், சிவில் நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், புனே ஆர்.டி.ஓ. மற்றும் புனே ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும்.
இத்திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று திறப்பு விழா நடந்தது. புனேவில் உள்ள சிவாஜி நகர் போலீஸ் தலைமையகத்தில் இருந்து மேற்கண்ட 2 ரயில் சேவைகளையும் கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி, 15,000 கோடி ரூபாய்க்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவே எங்களது அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கட்டிய வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்று கூறியிருக்கிறார்.