ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு பிரிவினரும் பாரமுல்லா மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, உரியின் சுருண்டா பகுதியைச் சேர்ந்த ஷோகத் அலி அவான் என்பவனை கைது செய்தனர். இவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவன் கொடுத்த தகவலின் பேரில், அகமது டின் மற்றும் முகமது சதீக் கட்டனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இம்மூவரிடம் இருந்தும் 2 கையெறி குண்டுகள், ஒரு சீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 4 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் மூவரும் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்று, இந்தியாவுக்கு கடத்தி வந்து, இங்குள்ள தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதோடு, நிதியுதவி திரட்டி தீவிரவாதிகளுக்கு வழங்கி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கான்சாஹாப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் நடத்திய சோதனையில் கிரெம்ஷோரா பகுதியைச் சேர்ந்த கைசர் அகமது தர், தாஹிர் அகமது தர், வாகர் பகுதியைச் சேர்ந்த அகிப் ரஷீத் கனி ஆகிய 3 தீவிரவாதிகளையம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், துப்பாக்கி, 57 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இது குறித்தும் மாநிலக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.